ஆகஸ்ட் மாதம் முதல் மீற்றர் பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடமுடியாது!
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ், மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
இதன் காரணமாகவும் முச்சக்கரவாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி ,மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற முக்கியமானதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சம்பந்தமான பலவிடயங்கள் ஆராயப்பட்டன.
அதிலே பொருத்தமற்ற அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பி செல்லுவது அநாவசியமான கண்ணாடிகள் பொருத்தி இருப்பது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.
குறிப்பாக வீதிகளில் பயணிப்போர் அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த ஒலிகளை எழுப்புகின்ற கருவிகளை முச்சக்கர வண்டிகளிலே பொருத்துவது தடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்தோடு பதிவு செய்யப்படாத வாடகை முச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாண நகர பகுதிகளில் பல தொல்லையாக இருப்பதாக மாநகர சபையினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரப்பட்டது.
எனவே ஜூலை மாதம் 30 ம் திகதிக்கு முன்னதாக வாடகைக்கு அமர்த்தப்படுகின்ற சகல முச்சக்கர வண்டிகளும் கட்டண மானி பொருத்தப்பட வேண்டும் பொருத்தப்பட்டால் மாத்திரமே சேவையில் ஈடுபட அனுமதிக்க முடியும் .
இதன்படி மாநகர சபையும் அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment