ஈழத்தமிழ் மக்களுக்காக இந்தியாவிடம் கோரிக்கை வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்தவரான திலீபனின் நினைவிடத்தில் தமிழ்நாட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று அஞ்சலி செலுத்தினார்
தமிழ்நாட்டின் தற்போதைய டிரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். கர்ணன் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். அதில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடலை இலங்கை தமிழர்கள், தங்களது தலைவர் பிரபாகரனை கண்டா வரச் சொல்லுங்க என பாடி சமூக வலைதளங்களில் தீ பரவச் செய்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ஈழத் தமிழர். இலங்கையின் யாழ்ப்பாணம் கோண்டாவில் என்ற இடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மீனாட்சி.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் செப்டம்பர் 30-ந் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை சந்தோஷ் நாராயணன் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அக்டோபர் 21-ந் தேதி மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணனின் “யாழ் கானம்” இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மனைவி மீனாட்சியுடன் யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று சந்தோஷ் நாராயணன் வருகை தந்தார். யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் திலீபன் நினைவு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அமைதிப்படை 1987-ல் இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவிடம் கோரிக்கைகளை வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் திலீபன். இந்த தியாகத்தைப் போற்றும் வகையில் செப்டம் பர் மாதத்தில் திலீபன் நினைவு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது யாழ்ப்பாணம் சென்ற சந்தோஷ் நாராயணன், மனைவியுடன் நல்லூர் சென்றார். நல்லூரில் திலீபன் நினைவிடத்துக்கு மனைவியுடன் சென்று சந்தோஷ் நாராயணன் நினைவஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் விடுதி ஒன்றில் உள்ளூர் இசைக் கலைஞ்ர்களுடன் “யாழ் கானம்” இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் சந்தோஷ் நாராயணன் ஆலோசனை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் தமிழர் பகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஒருவர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment