பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை இயங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் எம்.பி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 February 2025

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை இயங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் எம்.பி !

1000092153

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொத்துவில் பிரதேசத்தில் ஏ.பி.சீ.அருகம்பை கல்லூரி என்ற பெயரில் பாடசாலையொன்று இயங்குவதாகவும் அது கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்தப் பாடசாலையைக் காரணம் காட்டி விசா பெற்று சில வெளிநாட்டவர்கள் தொடர்ச்சியாக இங்கு தங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதில் ஏதும் முறைகேடுகள் அல்லது பின்புலங்கள் உள்ளனவா என்ற சந்தேகம் நிலவுதாக பொத்துவில் பிரதேச மக்கள் சிலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 


கல்லூரி என்ற பெயரில் பாலர் பாடசாலையொன்றைப் பதிவு செய்ய முடியுமா? வெளிநாட்டவரின் பெயரில் இந்தப் பாடசாலை என்ன அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதற்கான ஏற்பாடுகள் பாலர் பாடசாலை நியதிச் சட்டத்தில் உள்ளதா? என்ற சந்தேகங்களுக்கு நாட்டின் தேசிய நலன் கருதி தெளிவு காண வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 


பாலர் பாடசாலைப் பணியகத்தில் பதிவு செய்து ஆரம்ப, இடைநிலை கல்வி நடவடிக்கைகளும் இங்கு முன்னெடுக்கப் படுகின்றனவா அல்லது வேறு ஏதும் அரச அங்கீகாரம் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பன குறித்து அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டவரின் பிள்ளைகள் தான் இங்கு கல்வி கற்பதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின் பொத்துவில் பகுதியில் எத்தனை வெளிநாட்டுக் குடும்பங்கள் நிரந்தரமாகத் தங்கியுள்ளன. அவர்கள் எந்த நாட்டுப் பிரசைகள். என்ன அடிப்படையில் அவர்கள் தங்கியுள்ளார்கள்? எத்தனை வெளிநாட்டவரின் பிள்ளைகள் இங்கு கல்வி கற்கிறார்கள் என்பன குறித்தும் ஆராய்ந்து அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் என்றால் அவை கிரமமாக மேற்பார்வை செய்யப்பட வேண்டும். 


இப்பாடசாலை மேற்பார்வை செய்யப்படுகின்றதா? இதனை மேற்பார்வை செய்வோர் யார்? அவர்களின் தகைமை என்ன? என்பன குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சில அதிகாரிகளால் இப்பாலர் பாடசாலை முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், இதற்காக வருடாந்தம் சிலருக்கு விசா நீடிப்புக்கு சிபாரிசு செய்யப்படுவதாகவும் இதனடிப்படையில் சில வெளிநாட்டவர்கள் தொடர்ச்சியாக இங்கு தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முறைகேடு அல்லது ஊழல் ஏதும் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரித்து தெளிவு காண வேண்டியுள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad