கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் !
கொழும்பிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான வடக்கு மார்க்க ரயில் சேவைகள் ஜூலை மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹோ சந்திக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் திட்டம் காரணமாக வடக்கு புகையிரத மார்க்க ரயில் சேவைகள் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது அநுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றது. 91 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய உதவியுடன் புதுப்பிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது முடிந்ததும், வடக்கு ரயில் மார்க்கத்தில் சராசரியாக மணிக்கு 100 மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றார்.
வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததால் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் குறையும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ரயில் மார்க்க புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ரயில்வேயின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன
No comments:
Post a Comment