அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கும், அதன் வியாபாரத்திற்கும் உதவிசெய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாராவது இருந்தால் 0718598001 எனும் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள் என, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் பேசுகையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இலங்கையிலிருந்து போதைப்பொருள் பாவனையினை முற்றாக ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
குறிப்பாக வடகிழக்கில் போதை பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். பொலிஸ் திணைக்களத்திலும், போதைக்கு உதவிடும் சில குள்ள நரிகளும் உள்ளனர்.
அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போதைக்கு அடிமையானவர்கள், அதனை வியாபாரம் செய்பவர்கள் இன்றோடு அவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
"போதைப்பொருள் பாவனை பற்றி பொது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும். பள்ளிவாசல்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment