ஆசிரியர் பணி கௌரவமான தேசிய சேவையாக கருதப்படவேண்டும் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 July 2025

ஆசிரியர் பணி கௌரவமான தேசிய சேவையாக கருதப்படவேண்டும் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் !

1000138213

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட கல்விச் சபையை நிறுவுதல் பற்றிய உப குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்ஹ தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 


இதன்போது கல்விச் சபையை நிறுவுதல் தொடர்பில் இந்த உப குழுவினால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் உப குழுவின் நோக்கம் தொடர்பில் உப குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்ஹ கருத்துத் தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் கல்வித்துறை தொழில்வாண்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட கல்விச் சபையை நிறுவுவதற்கு இந்த உப குழு செயற்பட எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். விசேடமாக ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகிய ஐந்து பிரிவுகளிலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.  

1000138219


மேலும்,பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கருந்துத்தெரிவிக்கையில்,

கல்விச் சபையை விரைவாக நிறுவப்படுவதோடு அதில் ஆசிரியர்கள் அனைவரும் பதியப்படவேண்டும். பதியப்பட்டவர்கள் அரச பாடசாலை, தனியார் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று ஆசிரியர் பணி கௌரவமான தேசிய சேவையாக கருதப்படவேண்டும் என்பதோடு கல்விச் சபை ஊடாக அவர்களுடைய சம்பளம், பதவி உயர்வு என்பன வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  


இதேவேளை, கல்விச் சபையை நிறுவுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெறும் நோக்கில் பரிந்துரை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் தற்பொழுது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் உப குழுவில் தெரிவித்தார்.


அதற்கமைய, சம்பந்தப்பட்ட அந்தக் குழுவும் பாராளுமன்ற உப குழுவும் இணைந்து கூடி அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ முன்மொழிந்தார். 

 

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, ருவன் மாபலகம மற்றும் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.


- ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad