கல்முனை கிட்டங்கி பாலத்தை ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்க வேண்டும். - அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 December 2024

கல்முனை கிட்டங்கி பாலத்தை ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்க வேண்டும். - அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை !



கல்முனை கிட்டங்கி பாலத்தை புதிதாக நிர்மாணித்து மக்களின் பாவனைக்கு கையளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரியுள்ளது.


அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக 11 அம்ச எழுத்து மூல கோரிக்கைகளை நேற்று (05) வியாழன்  முன்வைத்தது.

இது குறித்து ஊடகங்களுக்கு இத்தொழிற்சங்கத்தின் 
தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தவை வருமாறு,

கல்முனை கிட்டங்கி பாலம் அமைக்கப்பட்டு 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அது பெயரளவில் ஒரு பாலமாக உள்ளதே தவிர பலமாக இல்லை. பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது.

அண்மைய காலங்களை எடுத்து கொண்டால் ஒவ்வொரு வருடமும் தொடர்தேர்ச்சியாக பல உயிர்கள் இப்பாலத்தில் காவு கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.

மழை, வெள்ளம் அடங்கலான இயற்கை அனர்த்தங்களை தாங்கி கொள்ள கூடிய நிலையில் இப்பாலம் இல்லை.  அன்மைய வெள்ள அனர்த்தத்தின்போதும்
இது நிரூபணமாகியுள்ளது.

பொதுமக்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் இப்பாலம் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. நாம் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக இதை புதிதாக நிர்மாணிக்க வேண்டும் என்று கோரி வருகின்றோம்.

போக்குவரத்து துறைக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ஏ.எல். எம். அதாவுல்லா பதவி வகித்தபோது எமது கோரிக்கைக்கு செவி சாய்ந்தார். ஆயினும் அவருடைய முன்னெடுப்புகள் துரதிஷ்டமாக கனிந்து விடவில்லை.

மற்றப்படி கடந்த அரசாங்கங்கள் இப்பாலத்தை கட்டியமைத்து தர உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றே கூறலாம். அவர்கள் செவி சாய்ந்து இதனை செயற்படுத்த முற்பட்டிருந்தால் கூடுதல் நாசங்களை தவிர்த்திருக்க முடியும்.

இந்நிலையில் திசைகாட்டி அரசாங்கம் கிட்டங்கி பாலத்தை நவீன முறையில் பொருத்தமான வகையில் அமைத்து தர வேண்டும் என்று கோருகின்றோம். ஜனாதிபதி, கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

                                             ( எஸ்.அஷ்ரப்கான் )

No comments:

Post a Comment

Post Top Ad