கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 December 2024

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகம் !

ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகம் நேற்று (21) சனிக்கிழமை பள்ளிவாசல்  தலைவர் ஏ.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தெற்குப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எப்.ஸஹ்றா ஸறாப்டீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 
எம்.றம்ஸீன் பக்கீர்,  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை  இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி வித்யா, கல்முனை 09 ஆம் பிரிவு கிராம சேவகர் எம்.ஏ.றஹ்னா, வைத்திய அதிகாரி டாக்டர் சுபோதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதம அதிதி டாக்டர் எஸ்.எப்.ஸஹ்றா ஸறாப்தீன் உரையாற்றும் போது, 

எமது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்பட்டிருக்கின்ற இரத்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவ்வாறான இரத்தக்கொடை நிகழ்வுகள் இடம் பெறுவது வரவேற்கத்தக்கது. அதிலும் குறிப்பாக ஹூதா பள்ளிவாயல் நிர்வாகம் இதனை ஏற்பாடு செய்தமை வரவேற்கத்தக்கது. இஸ்லாமிய அடிப்படையில் உயிர்களை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்ற நன்மையை பெறக்கூடிய  ஒரு செயற்பாடாகும். எனவே, இந்த விடயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே நீங்கள் எடுக்கின்ற முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

இஸ்லாமிய மார்க்க விடயங்களை போதிக்கின்ற ஒரு சிறந்த பணியை செய்கின்ற அதேவேளை சமூக சேவையாக இவ்வாறான ஏற்பாடுகள் நடைபெறுவதை வரவேற்கின்றேன் என்றும் கூறினார்

இரத்ததான முகாமில் சுமார் 115 குருதிக் கொடையாளர்கள் ஆண்கள், பெண்கள் என  கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்விலே கல்முனை ஹுதா பள்ளிவாசல் செயலாளர் ஏ.பி.எம்.தன்ஸீல், உப தலைவர் எஸ்.எச்.நிஹார் ஆகியோர் உட்பட தஃவா குழு தலைவர் மௌலவி ஏ.எம்.சாபித் ரியாதி மற்றும் தஃவா குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

                                            (எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment

Post Top Ad