அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான பாரிய சதி முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் விழிப்புடன் செயல்பட்டு நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டுமென அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவர் எஸ் எல் ஏ ஹலீம் தலைமையில் அட்டாளைச் சேனை ஜும்மா பள்ளிவாயல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான எம் எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களிலும் நாம் ஒவ்வொரு படிப்பினைகளை பெற்றிருக்கிறோம் பெரும்பான்மை இன மக்களே ஜனாதிபதி தேர்தல்களில் தீர்மானம் எடுக்கக் கூடிய சக்தியாக திகழ்கின்றனர்.
நடைபெற உள்ள பொதுத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பெரும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டி உள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களின் உச்ச பயன்களை பாவித்து நமது முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய இனவாதிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டது. என்பதனை நமது முஸ்லிம் சமூகம் மறந்துவிடக்கூடாது.
முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் எனக் கூறிக் கொண்டு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரக்கணக்கான தேரர்கள் பாதையாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
முஸ்லிம் சமூகத்திடம் இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாவித்து எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இனவாதிகள் அதிர்ச்சி அடையும் நிலைமை உருவாக்கப்பட்டது. நமது முஸ்லிம் சமூகத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் கட்சிகள் இயங்கி வருவதால் தான் வட கிழக்கு இளைஞர்கள் இன்னும் சமூகப்பற்றுடன் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் மூன்றும் இணைந்து போட்டியிடுவதற்கா முயற்சிகளை மேற்கொண்டோம் முடியவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் 04 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 03 முஸ்லிம் கட்சிகளில் இருந்து தெரிவாகினார்கள். அந்த 04 பேரும் வெவ்வேறு திசைகளில் செயற்பட்டனர்.
இத் தேர்தலிலும் மூன்று முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை, இந்த முறையும் மூன்று முஸ்லிம் கட்சிகளும் வெவ்வேறாக போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது சொந்த சின்னமான மரத்தில் தனித்து போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றது.
எல்லோரும் ஒற்றுமைப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெறும் நோக்குடன் நமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் .
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் எல்லா கட்சிகளும் ஒன்றாக ஒரு கூட்டமைப்பாக செயற்பட்டு பாராளுமன்ற அதிகாரத்தை பெற வேண்டும்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
"கடந்த காலங்களில் இயங்கி வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சிந்தனைகள் உருவாக்கப்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" எனத்தெரிவித்தார்.
(கே எ ஹமீட் )
No comments:
Post a Comment