காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அம்மாணவர்களின் கைகளினால் இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ்.ஐ. யாசீர் அறபாத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் “சேமிப்போம் உயிரினை காப்பாற்றுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் கடந்த 2022 சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் பாடசாலை சிறார்களினால் சேமிக்கப்பட்ட பணம் புற்று நோயினால் அவதியுறும் நோயாளர்களின் சிகிச்சைக்காக கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளர்களுல் ஒருவரும் பொதுமுகாமையாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ. நூகுலெப்பையிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது சுமார் 250இற்கும் அதிகமான பாடசாலை சிறார்கள் தாம் சேகரித்த பணத்தினை உண்டியல்களுடன் கொண்டு வந்து தங்கள் கைகளினாலேயே இந்நிலையப் பொறுப்பதிகாரியிடம் வழங்கி வைத்ததுடன், இப்புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தினையும் பார்வையிட்டனர்.
இதன் போது புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் காணொளிகள் இப்பாடசாலை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் அந்நிலையத்தினை நிறுவன பணிப்பாளர்களால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவித்தது மாத்திரமன்றி மனித நேய செயற்பாட்டினை கற்பித்துவரும் இப்பாடசாலைக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் ஹதீப் மௌலவி பாஸில் முப்தி, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம். ஜௌபர், உறுப்பினர்களான எஸ்.எல்.எம். ஆரிப், எம்.எப்.எம். முனீர், எம். நஜிமுல்லா, பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. றபா ஆதம்லெப்பை உட்பட ஆசிரியர்கள், பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலே புற்றுநோயாளர்களை பராமரிக்கும் இந்நிலையமானது இன மத பேதமின்றி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழக்கி வருகின்றது. தற்பொழுது இங்கு சுமார் 35 நோயாளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment