போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தந்தை-மகனை கடத்திச் சென்ற பெண் ; அதிரடிப்படையின் அதிரடி நடவடிக்கையில் கைது !
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக 54 வயதுடைய ஆண் மற்றும் 10 வயது சிறுவனை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கிராண்ட்பாஸில் 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கிராண்ட்பாஸில் வைத்து குறித்த பெண்ணிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்து, பகுதியளவிலான பணத்தைச் செலுத்தி நீர்கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மீதிப்பணம் கிடைக்காததால், குறித்த இளைஞரை சந்திக்கும் நோக்கில் நீர்கொழும்பு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
எனினும், அவரைச் சந்திக்கத் தவறியதால், அவருக்குப் பதில் அந்த இளைஞனின் தந்தை மற்றும் சகோதரியின் மகனைக் கடத்திக்கொண்டு கிராண்ட்பாஸில் உள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
10 வயது சிறுவனை பிணைக் கைதியாக வைத்திருந்த பெண், சிறுவனை விடுவிக்க மீதிப் பணத்தைச் செலுத்துமாறு கோரி இளைஞனின் தந்தையை விடுவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று இரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்து சிறுவனை மீட்டு கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணையும் அதிரடிப்படையினர் கைது செய்து கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment