10 கோடி நட்டஈடு செலுத்தும் அளவிற்கான சொத்து என்னிடம் இல்லை!
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன்.
88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம்.
குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார்.
அதனடிப்படையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.
அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை காரணமாகவே தமக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்காக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா அபராதத்தை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை.
அதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்.
தமக்கு எவ்வாறான தடங்கல் ஏற்படினும் எனது சேவையை முன்னெடுப்பதற்கு தயராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment