அம்பாறை மாவட்டம் - ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் சிசு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
குறித்த இருவரும் காதலித்து வந்த 17 வயதையுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
அத்துடன், குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில், யுவதி தனது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) சிசுவைப் பிரசவித்துள்ளார்.
விடயத்தை அறிந்து கொண்ட சிறுவின் தந்தை, காதலியின் வீட்டுக்குச் சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து, சிறுவின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் சிசுவைக் கண்டெடுத்துள்ளேன். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.
இந்நிலையில், சிசுவின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப்படாமை காரணமாக தொப்புள்கொடி இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து, அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு சிசுவைக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே, ஒலுவிலை அண்டிய பகுதியில் நபரொருவரால் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.
இந்தப் பின்னணியில்தான் சிசுவின் தாய் மற்றும் தந்தையை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
( பாறுக் ஷிஹான் )

No comments:
Post a Comment