கொலை செய்ய வேண்டும் என்ற என்னத்துடன் தாக்குதலுக்குள்ளாகி சுயநினைவிழந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிவ்வைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டமாவடியைச்சேர்ந்த ஆதம்பாவா ஜெஸீமுக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஓட்டமாவடி. பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான மௌலவி எம்.ஐ.ஹாமித் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2025.02.01ம் திகதி ஓட்டமாவடி-திருகோணமலை வீதியில் காணிக்கை வேப்பையடி எனும் பிரதேசத்தில் தனது சொந்த வயலில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டமாவடியை சேர்ந்த கடற்றொழிலாளியும் விவசாயியுமான ஆதம்பாவா ஜெஸீம் என்பவர் 08 பேர் கொண்ட கும்பலால் படுமோசமான முறையில் வயலில் வைத்து தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த நபர் கடந்த 2018ம் ஆண்டு 10 ஏக்கர் காணியை விலையாக வாங்கி, அக்காணியில் தொடர்ச்சியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் விலையாக வாங்கிய 10 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் காணியை ஒரு சாரார் உரிமை கோரி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இதே நிலையில் 2018ம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2021ம் ஆண்டு ஜெஸீம் என்பவருக்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து அவர் அக்காணியில் தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டுள்ளார்.
இம்முறை (2024) அக்காணியில் விவசாயம் செய்து கடந்த 2025.02.01ம் திகதி சனிக்கிழமை தனது மனைவி, பிள்ளைகளோடு வேளாண்மை அறுவடைக்காகச்சென்று அறுவடை செய்து 35 மூடை நெல்லை பைகளில் கட்டிய நிலையில், எட்டு பேர் கொண்ட ஒரு கும்பல் வயலினுள் நுழைந்து வயலில் நின்ற அஹமட் லெப்பை ஆதம் என்ற வயற் காவலாளியை காலில் தாக்கி அவரின் காலை உடைத்துள்ளனர்.
அப்போது அதனைத்தடுக்க ஓடிச்சென்ற காணியின் உரிமையாளரான ஜெஸீம் என்பவரையும் எட்டு பேரும் சேர்ந்து கொலை செய்யும் நோக்கில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பலமான தாக்குதலுக்குள்ளான ஆதம்பாவா ஜெஸீம் சுயநினைவிழந்து வயல் வெளியில் விழுந்து கிடக்கின்ற நிலையில் பொதி செய்யப்பட்ட 35 மூடை நெல்லையும் வெட்டு மிஷினுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 65,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஆதம்பாவா ஜெஸீம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத்தாக்கியவர்களில் மூன்று பேரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இவரை மிக மோசமாகத் தாக்கிய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாக அறிய முடிகின்றது.
அத்தோடு, நெல்லை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமும் இதுவரை மீட்கப்படவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள சகோதரனுக்கு நீதி கிடைக்க வேண்டும். கொலைவெறித்தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் இது விடயத்தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கவும் குற்றமிழைத்த கும்பலுக்கு தண்டனை கிடைக்கவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:
Post a Comment