மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market நேற்று இரவு (27) இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளாந்தம் காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வெளியிடத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு குறித்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்டவராக சொல்லப்படும் நபரொருவரை மட்டக்களப்பு தலைமைய பொலிசார் விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் காவலரணில் இருந்த பொலிசாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் குற்றச் செயல்களும், போதைப்பொருள் பாவணையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்ததாக அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் வெல்லாவெளி வரையான பகுதிகளில் இருந்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக நாளாந்தம் போக்குவரத்திற்காக அதிக செலவினை மேற்கொண்டு மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களுக்கு நஞ்சற்ற உணவு பொருட்களை சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த வியாபாரிகளின் நன்மை கருதி பல இலட்சம் பொறுமதியான உதவிகளை மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் பிரபல வர்த்தகருமான தேசபந்து மா.செல்வராசா அவர்கள் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment