கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இலகுவாக தீர்க்கப்பட வேண்டியது. ஆனால் பிச்சைக்காரனின் புண் போல் அரசியல்வாதிகள் அதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (07) மாலை அக்கரைப்பற்று கிழக்கு வாசலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தேசிய காங்கிரசினுடைய உயர் பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்தும் அவர் இங்கு கூறியதாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது தமிழர்களும் முஸ்லிம்களும் இலகுவாக தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும். இதை முஸ்லிம் காங்கிரஸ், டி.என்.ஏ இன் அரசியல்வாதிகள் தேர்தல் வருகின்றபோது அதற்கு உயிரூட்டி புறக்கோடியா, புலி கொடியா, தமிழர்களுக்கு கணக்காளர் வேண்டும் என்று இரண்டு பக்கத்தாலும் இந்த விடயத்தை சூடாக்கி விடுவார்கள். பின்னர் தேர்தல் முடிந்த பிறகு அமர்ந்து விடும் இந்த விடயம். இப்பொழுதும் பாராளுமன்றத்திற்கு சென்றவர்கள் ஏதாவது கதைக்க வேண்டுமே அதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிஸ்மில் சொல்லும்போது நல்ல விடயம் ஒன்றில் தொடங்குவது தானே. ஆனால், எடுத்த எடுப்பிலேயே போய் கூர்ப்படுத்தி கத்தி தீட்டுகின்ற வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள் பேசித் தீர்ப்போம் என்று சொல்வதற்கு யாரும் இல்லை. ஆனால் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அதைத்தான் யோசிக்கிறோம். எங்களால் இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க முடியும்.
ஆகவே, இந்த விடயம் அவர்களுக்கு தேர்தலுக்குரிய வியூகம். கல்முனையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோத வைத்துவிட்டு அவர்கள் அதில் குளிர் காய்வது அவர்களது வியூகம். இந்த பிரச்சினையை முடிப்பதென்றால் எப்பொழுதோ அது முடிந்திருக்க வேண்டும்.
கல்முனை தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ கத்தியை வைத்துக்கொண்டு வாழ்வதற்கு விரும்பவில்லை. அது சாதாரணமாக ஒரு எல்லை சம்பந்தமான விடயம் மாத்திரமே. இதனை இலகுவாக தீர்க்க முடியும். தீர்ப்பதற்கு அந்த பிராந்தியத்தின் உடைய அரசியல்வாதிகளும் அதற்கு பொறுப்பாக இருக்கின்ற அரசியல்வாதிகளும் இணங்க வேண்டும். மாறாக இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை பிச்சைக்காரனின் புண் போல் அது அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment