நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பிரதேசத்தில் அதிகரித்து வரும் சமூக விரோதச்செயற்பாடுகளை கட்டுப்படுத்தி மக்களைப்பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் கலந்துரையாடல் மேற்கொள்ள நேரம் ஒதுக்கித்தருமாறு கோரி மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பின் அனர்த்த அவசர உதவிச்சேவையினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்குடாக்கிளைக்கு கடிதம் கையளிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூக நலன்சார் அமைப்பான நாம் கடந்த 2021.02.21ம் திகதியிலிருந்து மக்கள் நலன் சார்ந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதுவரை எமது அவதானிப்பின்படி எமது பிரதேசத்தில் கொள்ளை, மோசடி, மோட்டார் ரேஸ் என்ற பெயரில்
இளைஞர்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளல், அதனூடாக மற்ற உயிர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தல், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி நிலை குலைந்து நிற்றல், போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரிப்பு போன்ற சமூக விரோதச் செயல்கள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுகின்றன.
இவ்வாறான விடயங்களைத்தடுக்கும் நோக்குடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமைகளில் சகல பள்ளிவாயில்களில் இடம் பெறும் குத்பா பிரசங்கங்களில் இது பற்றிய தெளிவூட்டல்களை வழங்கவும் அன்றைய நாள் மக்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கவும்பொலிஸ், இராணுவம், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து ஒன்றுகூடலை நடத்தி மேற்குறிப்பிட்ட தீய விடயங்களைத் தடுக்க நடவடிக்கையெடுக்கவும் தங்களது ஆலோசனை,
வழிகாட்டல், பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இம்மகஜரைக் கையளிப்பதோடு, இதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ள கலந்துரையாடலை மேற்கொள்ள ஒரு தினத்தை ஒதுக்கித்தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைக்கடிதம் செயலாளர் ஏ.எல்.சதாமினால் ஒப்பமிட்டு மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பின் அனர்த்த அவசர உதவிச்சேவை ஆலோசகர்களான மெளலவி ஏ.இல்யாஸ், அல்ஹாஜ் எம்.எம்.முபாறக் ஆகியோரினால் கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் வைத்து தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.தாஹிர் ஹாமியிடம் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment