தில்லை ஆறு - சம்புக்களப்பை ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 December 2024

தில்லை ஆறு - சம்புக்களப்பை ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை !



தில்லை ஆறு -  சம்புக்களப்பை  ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.


அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,

கல்லோயா திட்டத்தினால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு , திருக்கோவில், பிரதேசங்களில் அமைந்துள்ள 8500 ஏக்கர் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கி உள்ளன.

வெள்ளம் ஏற்படும் எல்லாக்
காலங்களிலும்  மேற்படி பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக வங்கித் திட்டத்தில் தில்லை ஆறு - சம்புக் களப்பை ஆழமாக்கி அகலமாக்க  30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில் இதுவரைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளமை  கவலைக்குரிய விடயமாகும். எனவே இவ் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக  பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், விவசாய அமைப்புகள் எல்லோரும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பை வழங்கத்  தயாராக உள்ளனர்.

எனவே இப்பிரதேச மக்களின்  நன்மை கருதி விரைவாக இவ் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டதில் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடமும் ,இவ் வருடமும் ஏற்பட்ட வெள்ளத்தினால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாரிய  வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளம் ஓடுவதற்கு தடையாக இருக்கும் அணைக்கட்டுக்கள், பிரதான வாய்க்கால்கள் புனரமைக்கபடவேண்டும் எனவும்
சம்மாந்துறை தொப்பியங்கொட (RB Bund)  புனரமைக்கப்படாமல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தீகவாபி - களியோடை வீதி ,தீகவாபி - பாலமுனை  வீதிகளுக்கு 250 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைப்பு செய்யும் செயற்பாடுகள் பிரயோசனமற்றதாக மாறிவிடும்.

எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு எதிர் காலத்தில் நிரந்தர தீர்வுகளுக்கு திட்டமிட்டு செயற்படவேண்டும். இல்லையென்றால் அரசின் பெருந்தொகையான பணம் வருடா வருடம் வீண் விரயம் செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதேவேளை பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள துவ்வை ஆறு அணைக்கட்டு ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சேதமடைவதால்  பசறிச்சேனை கிராமமே வெள்ளத்தில் மூழ்குவதுடன் அப் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கின்றனர்.

பொத்துவில்  துவ்வை ஆறு அணைக்கட்டை விசேட அபிவிருத்தி திட்டத்தில் சேர்த்து புனரமைக்க வேண்டும்.

இதே வேளை ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களின் ஆயிரக்கணக்கான விவசாய காணிகளுக்கும்  நீர்ப்பாசனம் கிடைக்கும். எனவே ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின்  பணிகளை முன்னெடுக்க வேண்டும்.  

நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் நிதி இல்லையென்றால் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான ஏற்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.

இவ் வருடம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 300 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பிய விடயம் மிகவும் கவலைக்குரியதாகும். 

கல்முனை, சம்மாந்துறை ,அக்கரைப்பற்று கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 11 பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட  பெருந்தொகை நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக அப் பாடசாலைகளின் அதிபர்கள் ,அபிவிருத்திச் சங்க குழுக்கள் என்னை சந்தித்து இவ்விடயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடமும் நிதிப் பற்றாக்குறை நிலவும் இக் காலகட்டத்தில் மத்திய அரசினால் பாடசாலை அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டமை கவலைக்குரிய விடயமாகவும். 

எனவே, அடுத்த வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படும்போது, இப்பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

                                          ( எஸ்.அஷ்ரப்கான் )

No comments:

Post a Comment

Post Top Ad