துயரத்தை உண்டு பண்ணிய நாள். இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 December 2024

துயரத்தை உண்டு பண்ணிய நாள். இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு.!



பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டென்று பொங்கி எழுந்தனையோ கடல் தாயே?


எங்கெங்கும் ஓலங்கள்... ஓலங்கள் ஈங்கிதுவோ பிரளயத்தின் கோலங்கள்?


நடுக்கடலில் நின்றதனால் - நில நடுக்க மதாலெழுந்த சுனாமியால் - உயிர் எடுக்கவியலாது போன என்னவன் கதையையா?


தண்ணீர் வரமுன் போய்விடுவோமென்(று) எண்ணமுன் சுழிநீரில் சங்கமமான -என் கண்மணிகளின் கதையையா?


எதைத் தான் நான் சொல்வது ? - இனி எப்படி யமைதியாய்க் கண்வளர்வது?

உங்கள் ஆக்கங்கள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்ப இங்கே அழுத்தவும். 

அலையோடு போந்த உடைமைகள்... உலையேற்ற வழியில்(லா) எம்முறவுகள்... நிலையில் இவ்வுலகிலிவை - இனி நித்தியம் தானோ?


தங்குதடை இன்றி இங்கு பொங்கிடுது வேதனை...  எங்களின் துயரிதுவோ உந்தன்பெருஞ் சாதனை?

பொறுமைக்கு இலக்கணமாம் பூமித்தாய் பெருமை கொண்டனளோ உனையுந்தாங்கி?


எங்களின் நிம்மதியைப் பூண்டோடழித்த நீ இங்ஙனம் அமைதியா யுறங்குகின்றனையே - இது எங்ஙனம் நியாயமாகும்?


மழலை தவழ்ந்த தடம் அழித்து அலை மகிழ்ந்து போனது போனது!

மலையென அலையெழுந்து மணிப் பிஞ்சுகளை மண் போட்டு மூடிப்போனது! ஆண்டாண்டாடு காலமாய் அழுது அழுது முடித்தோம்!

கண்ணீர் வரவில்லை- எம் கண்களில் கடல்நீரே வழிகிறது!


அமைதிப் பூங்காவின் வாசலை வாஞ்சையோடு பார்த்திருந்த வேளையில் இயற்கைத் தாயவள் கோரத் தாண்டவம் ஆடி முடித்தாளே!


அலை வந்து உயிர் பருக உணர்வுருகி - எங்கள் உதிரம் உறைந்தது!


வேதனைக் கண்ணீரில் முளைவிடும் வரிகள் விரக்தியின் உச்சத்தில் இயற்கையை வேட்டையாடும்!

வட்சப்சேனல் ஊடாக செய்நிகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும். 

ஆழிப்பேரலையே - உன் கோரப் பற்களுக்கு - எங்கள் தேசத்தின் தேகங்களும் இரை போனதே!


அலைகளே நீங்கள் கீறிப்போட்ட வளவுகள் - எங்கள் உறவுகளின் பிணம் தின்னுதே!


என்ன செய்வது? குட்டி சிங்கப்பூராக இலங்கையாகவும் இலங்கையை சிங்கப்பூராக மாற்றிப் பார்க்க நினைத்த - எங்கள் ஆசையில் கூட அலை விழுந்ததே!!

அலைகளால் அன்னைபூமி அழிந்தபோதாவது உலகம் வந்து கண்ணீர் மழையோடு காசு மழையும் பொழிகிறதே!இனிமேலாவது எங்கள் தேசம் நிமிரட்டும்!!


ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்காகவும் இன்றைய நினைவு நாளில் பிரார்த்திப்போம்... அவர்களது குடும்ப வாழ்வுக்காகவும் அனைத்து சமூகம் அடைந்த துயரச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்து கையேந்தி சுவனத்தின் சுக போகம் கிட்ட பிரார்த்திப்போமாக.

                                                                                                                              

                                                           வரிகள்  ✍️                                                                                

                                                     -முஹம்மத் மர்ஷாத்-

No comments:

Post a Comment

Post Top Ad