ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் நகரில் தொழில் முனைவோர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆளுனர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர் நஸீர் அஹமட்
2022ம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது இனி எந்த ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக இலங்கை தலை தூக்கவே முடியாது என்று பெரும்பான்மையான சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறினார்கள் ஆனால் அந்த எதிர்வு கூறல்களை சில மாதங்களுக்குள்ளாகவே அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை உறுதியான நடை போடத் தொடங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடு ஒருபோதும் சாத்தியமாகாது என்று அப்பொழுது பலரும் பேசினார்கள். ஆனால் இரண்டே ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய சாதனையாக வியந்து பேசப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்கு வழங்கிய தலைமைத்துவம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. உலகில் இலங்கையின் இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு ஈட்டிக்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சாதனையாகும் .
ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, மறுபுறத்தில் கடன் தொகை தள்ளுபடி என சர்வதேசத்திலும், ஜனநாயகம், நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கட்டியெழுப்புதல் என உள்நாட்டிலும் அவர் பாரிய சாதனைகளை ஆற்றியுள்ளார். இரண்டே வருடங்கள் அளவிலான குறுகிய காலத்துக்குள்ளான அவரது சாதனைகள் முழு உலகையும் வியக்க வைத்துள்ளது. இதன் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையானது எந்தவொரு கட்டத்திலும், எவ்வாறான சவால்களையும் தாக்குப்பிடித்து சரித்திரத்தில் சாதனைமிகு வெற்றிகளைப் பதிவு செய்யும் வல்லமை கொண்டது என்பதை நாங்கள் வலுவான முறையில் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
அது சாதாரணமான ஒரு விடயமல்ல, மிகப்பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கை இனி தெற்காசியாவின் ஒரு சாதாரண நாடு மட்டும் அல்ல , நவீன தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடு, சர்வதேச மட்டத்தில் சவால்களை எதிர்த்து வெற்றி கொண்டு தெற்காசியாவின் வரலாற்றை திருத்தி எழுதப்போகும் நாடு என்பதை உணர்த்தியுள்ளோம். செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உலகளாவிய லட்சியங்களை கொண்ட நாடு என்பதை பறைசாற்றியுள்ளோம். அதன் காரணமாகத் தான் உலகளாவிய ரீதியில் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் ,பொருளாதார நிபுணர்கள் மாத்திரமன்றி சாதாரண பொதுமக்கள் கூட இலங்கையின் சரித்திர சாதனை குறித்து வியந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க வழங்கிய திறமையான தலைமைத்துவம் காரணமாக இலங்கையைப் பற்றிய உலகளாவிய கருத்துக்கள் மாற்றமடைந்தது. இன்று உலக நாடுகள் பலவும் இலங்கையின் துரித மீட்சி குறித்து ஆய்வு ரீதியாக அணுகத் தொடங்கியுள்ளன.
2022 ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் நாம் பெற்றுக் கொண்டுள்ள நம்பகத்தன்மை கொண்ட வளர்ச்சியே அதன் காரணமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, நம் நாட்டைப் பற்றிய சர்வதேச மட்டத்திலான பிம்பத்திலும் ஒரு மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பொதுவான சாதனையின் பின்னால் நாடும் பொருளாதார ரீதியாக துரிதமாக மீட்சி பெற்றது. இந்த உள்நாட்டு தாக்கம் சர்வதேச தாக்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையில் தங்களுடைய நிறுவனங்களை தொடங்குவதைப் பற்றி தற்போது அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே மூடப்படும் நிலையில் இருந்த பல்வேறு தொழிற்சாலைகள் பொருளாதார சரிவில் இருந்து மீண்டெழுந்து தங்கள் தொழிற்சாலைகளை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதன் வழியாகவும் இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது. இவை எல்லாம் இரண்டே வருடங்களில் இலங்கை எட்டிக் கொண்டுள்ள வியத்தகு சாதனைகளாகும். இந்த சாதனைகள் தொடர வேண்டும். நம் நாடும் சரித்திரத்தில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். அதன் ஊடாக நம் எதிர்கால சந்ததி வளமான வாழ்க்கையொன்றுக்கான அடித்தளத்தை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் இலங்கையின் ஒவ்வொரு அசைவுகளும் உலகை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் தெற்காசியாவின் தலைமைத்துவத்திற்குத் தகுதியான நாடாக, சர்வதேச மட்டத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை திகழ வேண்டும். அதற்கான தகுதியான தலைமைத்துவத்தினை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழங்க முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் வடமேல் மாகாண தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment