முன்னாள் அமைச்சர் சுபையிர் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 June 2024

முன்னாள் அமைச்சர் சுபையிர் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!


இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்பட்டு, இத்தேசத்தில் சகலரும் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு, தியாகத்தையும் பொறுமையையும் பரைசாற்றும் இத்தியாகத் திருநாளில் அனைவரும் பிரார்த்திப்போம் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.சுபையிர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

தியாகத்தை அடிப்படையாகக் கொண்டதும், மகத்துவமிக்கதுமான இப்பெருநாள் தினத்தினை கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் எனது மனப்பூர்வமான ஹஜ்ஜுப்  பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.


இதேவேளை இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டு இப்பெருநாள் தினத்தினை கொண்டாடி மகிழ்வதற்கு முடியாத சூழ்நிலையில் உள்ள பலஸ்தீன காஸா மக்களின் நிம்மதிக்காகவும், நல்வாழ்வுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். எமது அன்றாட வணக்க வழிபாடுகளின் போதும் அந்த மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தியாக வரலாறு எமது நினைவிற்கு வருகிறது. அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தியாக வாழ்வு ஒரு அற்புதமான வரலாறாகும். குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்தே வெற்றிபெற்றார்கள். அந்த வீர வரலாற்று சம்பவத்தில் சகலருக்கும் படிப்பினை உள்ளது.

ஆகவே நாமும் எதிர்கொண்டுள்ள சவால்களை பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றிபெறுவோம். எமது அன்றாட செயற்பாடுகளை உளத்தூய்மையோடும் தியாகத்துடனும் மேற்கொள்ளும் போதுதான் நாம் வெற்றிபெற முடியும். மேலும் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய  வழிமுறையில் எமது பொருநாள் தினத்தை அமைத்துக்கொள்வோம்.

                        ( அம்பாரை மாவட்ட செய்தியாளர்)

No comments:

Post a Comment

Post Top Ad