75 வருடகால பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்த முகுதுமகா விகாரை மற்றும் மண்மலை தொடர்பான வர்த்தமானிக்குப் பணிந்து அங்கு தொடர வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் நேற்று (2024.06.18) நகர அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தும் பணியின் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு நிலங்களில் உள்ள எல்லை கற்களை அகற்றுதல், குறித்த வர்த்தமானியிலிருந்து மையவாடியை விடுவித்தல், எதிர்காலத்தில் வீதியில் சேரும் மண்ணை இடையூறின்றி அகற்றுவற்கான அனுமதியை CCD க்கு வழங்குதல், கடற்படை உத்தியோகத்தர்கள் இங்குள்ள பிக்குகளின் அழுத்தமின்றி சுதந்திரமாக பணிபுரிதல் என்பன குறித்து கூட்டத்தில் திட்டமிடப்பட்டன.
இவ்வர்த்தமானி குறித்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பல வழக்குகள் முஷாரப் எம்பி யின் முயற்சியால் வாபஸ் பெறப்பட்டிருக்கின்ற அதேவேளை, அங்குள்ள சிறிய பிக்குவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வர்த்தமானிக்குப் புறம்பாக பிழையான தகவல்கள் அடங்கிய வழக்கு தொடர்பான பணிகளை விரைவாக முடிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. SMM முஷாரப் அவர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள், கடற்படையின் கட்டளை தளபதிகள், அம்பாறை மாவட்ட தொல்பொருள் உத்தியோகத்தர்கள், பொத்துவில் பிரதேச செயலாளர், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
(அம்பாரை மாவட்ட செய்தியாளர்)
No comments:
Post a Comment