தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழினுட்ப பயிற்சி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 July 2023

தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழினுட்ப பயிற்சி !


அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழினுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளரின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் தலைமையில்  கலை,கலாசார பீட கேட்போர் கூடத்தில் நேற்று  வியாழனன்று (14) இடம்பெற்றது.


இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்திற்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமிஸ் அபூபக்கர் கலந்து கொண்டதோடு கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், புவியிற்துறை பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர் மற்றும் பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் பணிபுரியம் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் உரையாற்றிய உப வேந்தர் பேராசிரியர் றமிஸ் அபூபக்கர்;  ட்ரோன் தொழினுட்பம் போன்ற நவீன தொழினுட்பங்களை அனர்த்த முகாமைத்துவத்தில் உள்ளீர்ப்புச்செய்து அனர்த்தங்களில் இருந்து, முன்னாயத்த பாதுகாப்பு, உயிர் மற்றும் உடமை சேதங்களின் குறைப்பு போன்றவற்றின் மூலம் சமூக மேம்பாட்டிற்கு வழியேற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 


மேலும் நிகழ்வில் உரையாற்றிய புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் அனர்த்த முகாமைத்துவத்தின் ஒவ்வொரு படிமுறைகளிலும் ட்ரோன் தொழினுட்பத்தின் அவசியம் பற்றி தெளிவாக விளக்கியதோடு அனர்த்த ஆபத்துக்களை மாவட்டத்தில்  குறைப்பதற்கான நடடிக்கையினை  இத்தொழினுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் நுட்பங்களையும் விளக்கினார்.


அதனைத் தொடர்ந்து பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றதுடன் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் பெளசுல் அமீர் ஆகியோரினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக விளக்கவுரைகளும் நடைபெற்றதுடன்  தொடர்ந்தும் உத்தியோகக்கர்களுக்கு ட்ரோன் மற்றும் அதன் பிரயோகம் தொடர்பாக விரிவுரையும் செயற்பாட்டு பயிற்சியும் புவியியற்துறை தலைவரினால் நடாத்தப்பட்டது.


 ( நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ் ) 

No comments:

Post a Comment

Post Top Ad