படித்த, பண்பான மக்கள் உள்ள சபைகளில் தரக்குறைவான மற்றும் இழிசொற்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் ஊரின் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவமாக எடுத்து கூறினேன்.
அப்போது இப்பிராந்தியத்தில் உள்ள காணிகள் மற்றும் நிலங்களில் மண்போட்டவர்கள் அதனை அகற்றவேண்டும் என்று அவர் கூறினார். அவரது இல்லிடமான கிழக்கு வாசல் கூட 06 அடிக்கு மேல் மண்போட்டு நிரப்பிய இடமென்பதை அவருக்கு நினைவுபடுத்தினேன். அவர் அதிகாரத்திலிருந்த போது அவரது ஆதரவாளர்கள் நிறையபேருக்கு காணிகள் கடந்த காலங்களில் பிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களை நோக்கி விரல் நீட்ட முன்னர் உங்கள் குடும்பத்தினரை நோக்கி விரல் நீட்டுங்கள் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் கூறியுள்ளேன் என தேசிய காங்கிரசின் தேசிய இணைப்பாளராக இருந்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் சார்பிலான முன்னாள் பிரதி தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று (11) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும், காணிகள் முறையாக நிரப்பப்பட்டு முறையான வடிகாலமைப்புடன் மக்கள் பாவனைக்கு வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் நானும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம்.
இங்கிருக்கும் குளங்களை மண்போட்டு நிரப்பியது அவரும் நாங்களும் இணைந்து தான். கூகுள் படத்தை வைத்து காணிகளை தீர்மானிக்க முடியாது என்பதை அவருக்கு விளக்கினேன். குளங்களை நிரப்பும் போது சரி கண்ட அவர் இப்போது தலைகீழாக மாறி நிற்கிறார். அக்கரைப்பற்றில் களப்பு எங்கிருக்கிறது? அக்கரைப்பற்று பொது மைதான காணிகள் யார் வசமிருக்கிறது? பிரதேச செயலகத்தின் பின்னால் உள்ள காணிகளை பிடித்து வைத்திருப்பவர் யார் ? எல்லாமே அதாஉல்லாவின் குடும்பத்தினரிடமே உள்ளது. எல்லாவற்றையும் நடத்திவிட்டு ஒன்றும் நடக்காதது போல இருப்பதில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா முதல்தரமானவர்.
அவற்றுக்கு மேலாக அக்கரைப்பற்று தேசிய பாடசாலை அபிவிருத்தி குழு கூட்டத்தையும் குழப்புகிறார்கள், பழைய மாணவர் அமைப்பின் கூட்டத்தையும் குழப்புகிறார்கள் இவர்களின் நோக்கம் என்ன? இந்த அமைப்புக்களில் அவர்களும் இணைய விரும்பினால் முறையான அனுமதிகளை பெற்று இணைந்து பாடசாலையை மேம்படுத்தலாம்.
அப்படியெல்லாமல் குழப்புவதன் மூலம் எதை அடைய முயற்சிக்கிறார்கள். இந்த குழப்பல் திட்டமிடல்களுக்கு பின்னால் தேசிய காங்கிரசின் முக்கிய செயலாளர் ஒருவர் இருக்கிறார். சம்பவம் தொடர்பில் பொலிஸுக்கு வாக்குமூலம் வழங்க சென்ற இரு பெற்றோரை பொலிஸ் கைது செய்துள்ளது. நேற்று காலை கைதானவர்களை இன்று காலைதான் நீதிமன்றுக்கு பொலிஸ் ஆஜர் படுத்தியதென்றால் பின்னணியில் உள்ள அரசியல் சக்தி யார் என்பதை எல்லோரும் அறிவர். வைத்தியர்கள் உங்களுக்கு ஒன்றுமில்லை வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறியும் கேளாமல் பொய்க்கு நாடகம் நடித்துக்கொண்டு ஒருவர் வைத்தியசாலையில் இருக்கிறார்.
நீர்வழங்கல் காரியாலய இடமாற்றத்தின் போதும் நாங்கள் மக்களின் பக்கம் நின்று வீதிக்கு இறங்கி போராடினோம், பள்ளிவாசல் காணியை மீளப்பெற வேண்டிய போது அவர்களுக்கு விளங்கும் பாஷையில் எடுத்துக்கூறி அந்த காணியை மீட்டெடுத்தோம், கொரோனா காலத்தில் களத்தில் நின்ற அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தை கலைக்க முற்பட்டார், வைத்தியசாலை நிர்வாகத்தை சீரமைத்த போதும் அவர் குறுக்கிட்டார், எனது தொழிலை முடக்க அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்தார், கற்பினிகளுக்கான சிகிச்சை நிலையத்தை களஞ்சியமாக்க எத்தனித்தார், இவற்றையெல்லாம் முகங்கொடுத்து பழகியவர்கள் நாங்கள். மக்கள் இவர்களை பற்றி நன்றாக அறிந்துள்ளார்கள். இவர்களின் இந்த அச்சுறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் நாங்கள் முகங்கொடுத்து பழகியமையால் நாங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட போவதில்லை. இவர்களின் எந்த சதிகளையும் நேருக்கு நேராக சந்திக்க தயாராக இருக்கிறேன். எங்களுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட போலியான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
( நூருல் ஹுதா உமர் )
No comments:
Post a Comment