சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் உட்பட எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை ஒதுங்குகின்றன.
பல்வேறு நாடுகளில் இருந்து கடல் நீரோட்டங்கள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுகள் உட்பட இலங்கை கடற்கரையில் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. இதனைச் சமாளிப்பதற்கு கூட்டு பிராந்திய நடவடிக்கைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பவளப்பாறை சூழலியல் (Coral Reef Ecology) தொடர்பான கருத்தரங்கை மேற்கோள் காட்டி சுட்டிக் காட்டினார்.
வளி மாசடைதலை எடுத்துக் கொண்டாலும் இதேபோன்ற எல்லை கடந்த நிலையையும் அதிலும் கூட்டு பிராந்திய நடவடிக்கையின் தேவையையும் நாங்கள் காண்கிறோம். அண்மையில் இலங்கையின் பல முக்கிய நகரங்களில் ஏற்பட்ட காற்று மாசுபாடு அயல் நாடுகளில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் நேரடி விளைவாகும். இத்தகைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு பிராந்திய ரீதியான கூட்டு நடவடிக்கை தேவை என அமைச்சர் நசீர், இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று (14) நடைபெற்ற உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) தெற்காசிய பிராந்தியக் கூட்டத்தில் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அதன் கவுன்சில் கூட்டத்திற்கும், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறவுள்ள பொதுச் சபைக்கும் முன்னோடியாக இந்த கூட்டம் நடைபெற்றது.
1992 இல் நிறுவப்பட்டதிலிருந்து, GEF இன்று உண்மையிலேயே உலகளாவிய சுற்றுச்சூழல் சேவையாக உருவெடுத்துள்ளது, 185 உறுப்பு நாடுகள் 5,200 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக 22 பில்லியன் டாலர்களை மானியமாகவும் $120 பில்லியன் நிதியுதவியாகவும் இதனூடாகப் பெறுகின்றன.
"GEF இன் முக்கியத்துவம், உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உள்ளடக்கிய பல பலதரப்பு சுற்றுச்சூழல் மாநாடுகளுக்கு பயனுள்ள நிதியளிப்பு பொறிமுறையாக அது வகிக்கும் பங்களிப்பில் தங்கியுள்ளது. வெவ்வேறு சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களையும் தொகுத்து, அவற்றை ஒரே நிதிப் பொறிமுறையின் கீழ் நிவர்த்தி செய்வதன் மூலம் குறுக்குவெட்டுப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், குவிமையப் பகுதிகளுக்கு இடையே எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கம் பரிமாறப்படுவதைத் தவிர்ப்பதற்கும் முடியுமாகிறது,” என இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் மேலும் கூறினார்.
" புத்தாக்கம் மிக்க புதிய காலநிலை நிதியளிப்புப் பொறிமுறைகள் கருவிகள் உலகளாவிய காலநிலைச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதோடு 1.5 டிகிரி செல்சியஸ் சரிவுப் புள்ளியையும் பாதுகாக்கும். இனியும் வீணாக்குவதற்கு உலகிற்கு நேரம் இல்லை. அனைத்துத் தெரிவுகளையும் நாங்கள் ஆராய வேண்டும்,” என்று மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.
காலநிலை நெருக்கடிகளின் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றென்ற வகையிலும், பாரிய அளவிலான பல்லுயிர் இழப்பு, நிலச் சீரழிவு, காடுகளின் அழிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றென்ற வகையிலும், காலநிலை நடவடிக்கை தொடர்பில் தேசிய அளவிலும் உலகளவிலும்8 அவசரமானதும் சமநிலையானதுமான செயல் நிறைவேற்றத்திற்கு பரவலான கூட்டுக் குரல் தேவை என்பதை இலங்கை அங்கீகரித்துள்ளது. எவ்வாறாயினும், தெற்காசியாவில் உள்ள நமது நாடு போன்ற காலநிலை பாதிப்புக்குட்படக்கூடிய, வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்வதும் அதற்கான அணுகலும் பெரும் சவாலாக உள்ளது.
எனவே, இலகுவாகவும் சரியான அளவிலும் பெறக் கூடிய வகையில் காலநிலைக்கான தரமான நிதியைத் தக்க வைத்துக் கொள்வது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முக்கிய அம்சமாக மாறியுள்ளது. உலகளாவிய காலநிலை நெருக்கடியின் அளவைக் கருத்தில் கொண்டு, அதைக் கையாள்வதில் எங்களுக்கு விதிவிலக்கான அணுகுமுறைகள் தேவை என அமைச்சர் நசீர் அஹமட் சுட்டிக் காட்டினார்.
காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய வளரும் நாடுகளின் அக்கறைகள், கோரிக்கைகள் மற்றும் நலன்களை ஒருங்கிணைத்து, சில கடன்களை ரத்து செய்வதற்கும் கடனிலிருந்து விடுவிப்பதற்கும் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் காலநிலை தாக்கங்கள் மற்றும் தணிப்பு முன்முயற்சிகளுக்கு அத்தகைய வளங்கள் உறுதிப்படுத்தக் கூடியவாறு COP28 ஐ.நா காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக "காலநிலை நீதி மன்றத்தை" உருவாக்குவதற்கு இலங்கை முன்மொழிதெரிவித்தார். இந்த விதிவிலக்கான சிந்தனையை முன்னோக்கிக் கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெற்ற உலக நிலைபேறான வளர்ச்சி உச்சி மாநாட்டில், “பயோஸ்பியர் ரிசர்வ் வங்கி” என்றழைக்கப்படும் சர்வதேச மேம்பாட்டு வங்கியை நிறுவுவதற்கான யோசனையை முதல் தடவையாக நாங்கள் முன்வைத்துள்ளோம் என அமைச்சர் ஞாபகப்படுத்தினார்.,
GEF இன் வெற்றிக்கான இலங்கையின் பங்களிப்பை இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார். “பல ஆண்டுகளாக GEF வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் பாராட்டுகிறது.
இந்த மாநாட்டில் GEF திட்டங்கள் பற்றியும் மற்றும் திட்ட நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் நீங்கள் ஆலோசிக்கும்போது, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் திறம்பட நிவர்த்தி செய்வதற்கு எல்லைகடந்த இயல்புகளைக் கொண்ட தெற்காசியப் பகுதியில் எவ்வாறு ஒருங்கிணைந்த GEF திட்டங்களைச் செயற்படுத்த முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை, GEF தெற்காசியா தொகுதியானது எதிர்கால நிதியுதவி சுழற்சியில் இதுபோன்ற பிராந்திய ஒருங்கிணைந்த திட்டங்களை கொண்டு வரலாம் என்ற கருத்தையும் நான் முன்வைக்கிறேன் என தமது உரையின் இறுதியில் அமைச்சர் தெரிவித்தார்.
திரு. ராஜேந்தரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) தெற்காசிய தொகுதி கூட்டத்தில் , GEF கொள்கை அதிகாரி சியோ-ஜியோங் யூன் மற்றும் ஆசியா , பசிபிக் நாட்டு அதிகாரிகளும் GEF தெற்காசியா தொகுதியின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்
No comments:
Post a Comment