இலங்கை மக்களுக்கு வைத்திய நிபுணரின் எச்சரிக்கை!
இலங்கையில் இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரித்துள்ளதால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாருக்காவது காய்ச்சல் பரவிவருவதாக இருந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முகக்கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும் என்றும் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இந்த காலப்பகுதியில் டெங்கு நோய் மற்றும் இன்புலுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெங்கு நோய் அறிகுறிகளாக இரண்டு தினங்களுக்கு கடினமான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி போன்ற அடையாளங்களையே காண்கிறோம். இரண்டு தினங்களுக்கு அதிக நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று இன்புலுவன்ஸா நோயும் அதிகரித்துச் செல்கிறது. அதன் அறிகுறிகளாக காய்ச்சலும் இருமல், தடிமல், ஒரு சிலருக்கு வாந்தி ஏற்படுவது போன்ற அறிகுறிகளை காணலாம். இந்த நோயுடைய சில சிறுவர்கள் மயக்கமடைந்து விழுவார்கள். அதேநேரம் வீடுகளில் மிக விரைவாக இந்த நோய் பரவுவதாக கண்டால், அது இன்புலுவன்ஸா வைரஸாகும். இவ்வாறான நோய் அறிகுறி இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
அதிக மக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், இந்த நோய் அறிகுறி இருக்கும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம். அவர்களை முடியுமான வரையில் ஓய்வாக இருக்கச்செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment