கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள இடைக்கால தடை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.எதிர்வரும் 21ம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு கோரும் இறுதி நாளன்று வாக்களிப்பு இடம்பெறும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இதேநேரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை, நாளைவரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் இது தொடர்பில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இடைக்காலத் தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதேநேரம், தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் குறித்த விவாதம் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment