இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பள்ளிக் குடியிருப்பிலிருந்து இசங்கணிச்சீமை நோக்கி செல்லுகின்ற வீதியின் இடையில் அமைந்திருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சகோதரர் அலியார் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகளை அடிக்கடி கொண்டு இனந்தெரியாதோர் வீசிவிட்டு செல்வதனால் ஏற்படுகின்ற அசௌகரியம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகள் மட்டுமல்லாது இறந்து உருக்குலையும் நிலையில் பெரியதொரு பசு மாட்டினையும் அங்கு கண்டோம். அந்த காணிக்குள் இருக்கும் புற்பத்தைக்குள் இறந்த மாட்டை மறைத்துப் போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.
புழுத்து வெடிக்கின்ற நிலையில் இருந்த அந்த செத்த பிராணியின் துர்நாற்றத்தினால் பசுமை பொருந்திய அந்த வயல் பிராந்தியமே பெரும் அசௌகரிய நிலைமைக்கு இருந்ததை பார்க்கின்ற போது எமது மக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் மற்றவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுவதுடன், பசுமையான அழகான சூழலும் மாசுபடுவதை அவதானித்து மிகவும் மன வேதனையாக இருந்தது. இந்த அவதானிப்பின் பின்னர் பிரதேச சபை ஆளணியை கொண்டு பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் அக்கழிவுகள் அகற்றியுள்ளோம்.
மீண்டும் இவ்வகையான நாசகார நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆடு மாடுகளை (அனுமதி பெறப்பட்ட பொது தேவைகளுக்காக) அறுக்கப்பட்டால் அல்லது ஏதாவது பிராணிகள் உங்களுடைய வீட்டில் அல்லது பொதுவெளியில் இறந்தால் உடனடியாக பிரதேச சபையோடு தொடர்பு கொண்டு அபிராணிகள் அழுகிப்போவதற்கு முன்னர் புதைத்து விடுவதற்கு அறிவிக்குமாறு பொதுமக்களை இதனூடாக கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக நம்மால் மேற்கொள்ளப்படுகின்ற நல்லதொரு பணி எம்மோடு இருக்கின்ற நிறைய சகோதரர்களை சந்தோஷப்படுத்தும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment