வசந்த முதலிகேவின் உரிமைக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏழாவது பிரதிவாதியாக ஆக்குவதற்கு நீதிமன்ற அனுமதி கோரினார்.
பயங்கரவாதத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வசந்த முதலிகேவை தடுத்து வைக்குமாறு போதிய ஆதாரங்கள் இன்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் கடிதம் அனுப்பியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், உரிய விதிமுறைகளை மீறி பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு பொலிஸாரால் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவது வழமை என நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சட்டத்தில் வகுத்துள்ள முறைப்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், உரிய விதிகளில் திருத்தம் செய்யாமல் இந்த நடைமுறைகளை தொடரக்கூடாது என்றும் வலியுறுத்தினர் .
கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு ஆதாரமாக இது வரை எந்த ஒரு சாட்சியமும் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment