வாகரைப் பிரதேசத்தில் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டம் அமுல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 June 2024

வாகரைப் பிரதேசத்தில் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டம் அமுல் !



வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொண்டு உள்ளுர் வளங்களை அதி உச்சத்தில் பயன்படுத்தி நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள உள்ளுர் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக கோறளைப்பற்று வாகரைப் பிரதேச செயலக உதவிச் செயலாளர் அர்ச்சனா புவேந்திரன் தெரிவித்தார்.



கூட்டுறவுச் சங்கங்களின் பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வுகள்   வாகரைப் பிரதேச செயலகத்தின் முன்றலில் இடம்பெற்றன.


சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்து சந்தைப்படுத்தும் திட்டம் அமுலாக்கப்படுகிறது.


இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார்  தலைமையில் இடம்பெற்ற அங்கு சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் உள்ளுர் வளங்களைப் அதி உச்ச மட்டத்தில்  பயன்படுத்தி நஞ்சற்ற விவசாய உற்பத்திகளின் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதேச உதவிச் செயலாளர் அர்ச்சனா, சமகாலத்தில் இரசாயனங்கள் கலந்த தேகாரோக்கியத்தைப் பாதிக்கும் உற்பத்திகள் பெருகிவிட்டன. இவற்றை உட்கொள்வதால் நாமும் நமது எதிர்கால சந்ததியும் உடல் ஆரோக்கியமற்றவர்களாக ஆகக் கூடிய நிலைமை உள்ளது.



எனவே நிலவளமும் நீர் வளமும் சேதன வளமும்  நிறைந்துள்ள வாகரைப் பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பிரதேச மக்கள் அதிகூடிய வருமானத்தை ஈட்டிக் கொள்ள ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டத்தை மக்கள் மத்தியில் அமுல்படுத்தும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் சேவைகள் பாராட்டப்பட வேண்டும்.” என்றார்.


அங்கு கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார், இயற்கை வளத்தை வளம் குன்றாமல் பாதுகாத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தி பிரதேச மக்கள் பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற வேண்டும். இதற்காகவே மூன்றாண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பிரதேச மக்கள் பயனடைய வேண்டும். கூட்டுறவுச் செயற்பாட்டின் மூலம் பிரதேச மக்கள் சமூக பொருளாதார, கல்வி சுகாதாரம், கலாச்சார சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் தாங்களாகவே உணர்ந்து முன்னேறும் நிலை உருவாக வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது” என்றார்.



இந்த பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளின் விற்பனை ஊக்குவிப்பு  நிகழ்வுகளில் வாகரைப் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுதர்ஷன் உட்பட இன்னும் பல அதிகாரிகள,; பொதுமக்கள், கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள் கூட்டுறவு அமைப்பின் உள்ளுர் உற்பத்தியாளர்கள இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் வெளிக்கள அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.















                                                            (சாதிக் அகமட்)

No comments:

Post a Comment

Post Top Ad