ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப்பெற்றுள்ள கொவிட் மையவாடியை முறையாக பராமரிப்பதற்கு குழு ஒன்று அமைத்து அதனூடாக அதனை அழகு படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் இரண்டாவது காலாண்டுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (14/06/2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த கொவிட்டால் மரணமானவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடமளித்து அதனால் நாட்டில் மாத்திரம் அல்ல உலகத்திலயே புகழப்பட்ட ஓட்டமாவடி பிரதேசம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை அந்த பகுதியை அழகுபடுத்தி பாதுகாப்பது எமது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேசத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
பிரதேசத்தில் காணப்படும் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் காணி, கல்வி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம், விளையாட்டு, வனவளத் திணைக்களம், போக்குவரத்து, நன்னீர் மீன்பிடி , கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் எட்டப்பட்டதுடன் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகள் தொடர்பாக சம்மந்தப்ட்ட திணைக்கள தலைவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.
பிரதேசத்தின் 24 வீதிகளுக்காக 47 மில்லியன் ரூபாவும், பண்முகப்படுத்தப்பட்ட 07 வேலைத்திட்டத்திற்காக 07 மில்லியன் ரூபாவும், 19 பிரதேச அபிவிருத்தி திட்டத்திற்காக 07 மில்லியன் ரூபாவும், வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் எட்டு குடும்பங்களுக்கு ஆறு லட்சத்தி என்பதாயிரம் பெறுமதியில் ஆடுகள் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், பிரதி அமைச்சர் சி.சந்திரகாந்தனின் இணைப்பு செயலாளர் தஜிவரன், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment