கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த மழை காரணமாக விசேடமாக பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 6 மத்திய நிலையங்களில் 330 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 64 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் இரண்டு மத்திய நிலையங்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நிவாரண மத்திய நிலையங்களில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் ஒரு மத்திய நிலையம் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
மாணிக்க கங்கை பெருக்கெடுத்ததனால் அதனை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதனால் மாணிக்க கங்கையை பயன்படுத்த வேண்டாமென அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். செல்லக் கதிர்காமம் கோவில் மற்றும் அதனை அண்மித்த சகல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை யால வனப்பூங்காவுக்குள் நுழையும் பிரதான நுழைவாயில் நீரில் மூழ்கியுள்ளதால் பூங்காவிற்குள் மக்களை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக கஹஒலியா ஓயாவின் தெற்குகரை உடைபெடுத்ததால் பல்லியகொடல்ல சுங்காவில் ஊடாக சோமாவதி வீதி பபுறாண மஹபாலமவிற்கு அருகில் சேதமடைந்துள்ளது. இதனால் கஹஒலியா தெற்கு கரை கடுமையாக சேதமடைந்துள்ளதால் 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மொறகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவும் இன்று காலை திறக்கப்பட்டது.
தற்போதய கன மழை காரணமாக மஹாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்ததை அடுத்து கல்லெல்ல பாலத்திற்கு அருகில் வீதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் தற்போதய அபாய நிலையை கவனத்திற் கொண்டு மீள் அறிவித்தல் வரை மனம்பிட்டிய – கல்லெல்ல வீதியை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதோடு ரயில் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் வாகனேரிப் பகுதியில் 174 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 3 தினங்களாக அடைமழை பெய்துவருவதால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதிகளவான மக்களும் இடம்பெயர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வாகனேரிக்குளத்தில் நீர்மட்டம் அதிகரித்த நிலையில் வான்கதவு 6 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மயிலம்பாவெளி, துன்பங்கேணி, உருகாமம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உருகாமம் குளமும் வான் பாய்ந்து வருகிறது. உன்னிச்சை குளமும் வான் பாய்கிறது. கட்டுமுறிவுக் குளம், பாசிக்குடா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட பாலங்கோட்டாறு, பத்தினிபுரம், இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் பெய்துவரும் அடை மழை காரணமாக சுமார் 65 ஆயிரம் ஹெக்டேயர் பெரும்போக நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. இறக்காமம், மலையடிக் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் மலையடி கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளான்மையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் நாட்டின் வடக்கு, கிழக்கு ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவும் அனேக பகுதிகளில் இன்று மேகம் மூட்டம் நிறைந்து காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இன்றைய தினமும் கன மழைக்கான சாத்தியம் உள்ளது. வடக்கு கிழக்கு, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் உள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கன மழைக்கு சாத்தியம் உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் உள்ளது.
No comments:
Post a Comment